Wednesday, May 14, 2008

நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்‘ நாடகம் மூலம் காந்தி கொலையை, சங்பரிவார் கும்பல் நியாயப்படுத்தியது - ஜஸ்டின்ராஜ்

மத அமைப்பில் பெண்களுக்கும் பங்கு கோரி கலகம் செய்தார் சினிட் ஒகோனோர் என்ற அயர்லாந்து நாட்டு பெண் பாடகர். இவர், 1992-இல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆர்.சி. கிறித்துவ அமைப்பின் தலைவராக இருந்த போப் இரண்டாம் ஜான் பால் - இன் புகைப்படத்தைக் கிழித்து எறிந்தார். அதுமட்டுமன்றி, தான் முழு நினைவோடும், சுய அறிவோடுமே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

ரோமன் கத்தோலிக்க அமைப்பில் இருந்து தனியே பிரிந்து “இலத்தின் ட்ரினிடென்டைன்” என்ற அமைப்பை மைக்கேல் பர்க்ஸ் என்ற பாதிரி தொடங்கினார். இந்த அமைப்பின் முதல் பெண் மத குருவாக பாடகர் சினிட் ஒகோனோர் பின்னர் நியமிக்கப்பட்டார். (இந்த அமைப்பு தான் பாதிரிகளிடம் தொலைபேசியில் பாவமன்னிப்புக் கோரும் முறையை முதன்முதலில் ஏற்படுத்தியது)

இந்த உலகத்தின் சுகங்களையயல்லாம் துறந்ததாக (பெயரளவில் மட்டும்) கூறிக்கொள்பவர்களுக்கும் பதவி சுகம் என்பது தேவைப்படுகிறது. அல்லது, கொள்கையளவில் தான் முழுக்க ஏற்றுக்கொண்ட மத நிறுவனமேயானாலும், தனக்கான பிரதிநிதித்துவத்தை மறுக்கும்போது - அந்த நிறுவனத்தின் அமைப்புத் தலைவரையே எதிர்க்கவும் துணிகிறது.

ஆனால், வங்கதேச தஸ்லிமா நஸ்ரின் முஸ்லிம் மத நிறுவனத்தின் எந்தப் பதவியையும் குறிவைத்து எழுதத் தொடங்கவும் இல்லை ; எழுதியவரும் அல்ல. தஸ்லிமா, வங்க தேசத்தில் மருத்துராக பணியாற்றியவர். பணி நேரத்தையும் தாண்டி கைவிடப்பட்ட குழந்தைகள், பெண்கள் என்று தேடித்தேடி மருத்துவம் பார்த்து, அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தவர்.

அம்பேத்கரின் நினைவு நாளான, டிசம்பர் - 6 அன்று அயோத்தியில் இருந்த 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த பாபர் மசூதியை 1992-இல் இடித்துத் தரைமட்டம் ஆக்கியது பார்ப்பன காவிக்கூட்டம். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் இருந்த இந்துக் கோயில்களை முஸ்லிம் மத வெறியர்கள் இடித்தனர். அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. இது தஸ்லிமாவின் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை கருவாகக் கொண்டு “லஜ்ஜா” என்ற புதினத்தை 1993 -இல் அவர் எழுதினார். தமிழில் இதற்கு “அவமானம் / வெட்கம்” எனப் பொருள் கொள்ளலாம். மேலும், “முஸ்லிம்களின் புனித நூலான குரானை அடியோடு மாற்ற வேண்டும்” என்ற தனது கருத்தை ஒரு நேர்காணலில் தஸ்லிமா கூறினார்.

இதை ஏற்றுக்கொள்ள பக்குவமற்ற வங்கதேச முஸ்லிம் மத வெறியர்கள், தஸ்லிமாவின் தலைக்கு 500 டாலர் விலை வைத்தனர். விளைவு, 1994 -இல் வங்கதேசத்திலிருந்து கிளம்பி சுவீடனில் அடைக்கலம் புகுந்தார். பின்னர் சில அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் தஞ்சமானார். அண்மைக்காலமாக - மேற்குவங்கம், ராஜஸ்தான் என்றும் தற்போது டில்லியில் உளவுத்துறை கட்டுப்பாட்டில் வீட்டுச் சிறையில் உள்ளார்.
“வங்கச்சிங்கம்” எனப்பட்ட ஷேக் முஜிபுர் ரகுமான் 1975 ஆகஸ்ட் 15-இல் மனைவி, மூன்று மகள்களுடன் அவர் வீட்டிலேயே கொல்லப்பட்டார். கொலைகளை செய்த 15 இராணுவ அதிகாரிகள் நிரந்தரமாக சில நாடுகளில், அதாவது, அவர்கள் விரும்பிய நாடுகளில் இன்றும் தங்கியுள்ளனர். ஆனால், தனது மொழிபேசும் மேற்கு வங்க மாநிலத்தில் தங்கி எழுத்துப்பணியை தொடரவே தஸ்லிமா விரும்புகிறார். எனினும் விரட்டப்பட்டார்.

வங்கதேசம் என்ற நாடு உருவாகக் காரணமான முஜிபுர் -அய் கொலை செய்த 15 பேரில் ஒருவரின் உயிருக்குக் கூட வங்கதேச முஸ்லிம் மத வெறியர்கள் விலை வைக்கவில்லை. மாறாக நடைமுறை அவலத்தைச் சுட்டிக்காட்டி ஒரு புதினம் எழுதியதற்காகவும், மத நூலைப் பற்றிய கருத்தை வெளிப்படையாக கூறியதற்காகவும் தஸ்லிமாவின் கழுத்தை நெரிக்கக் கிளம்புவது எப்படிச் சரியாகும்?

தஸ்லிமா எழுதிய “லஜ்ஜா” என்ற புதினத்தை மறுத்தோ அல்லது “குரானை அடியோடு மாற்ற வேண்டும்”என்ற கருத்தை எதிர்த்தோ - நடைமுறைக்கு ஒத்துவரும்படியும், ஆதாரத்துடனும், நேர்மையாகவும் முஸ்லிம் மதவெறி ஆணாதிக்கவாதிகள் தங்கள் கருத்தைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களைப் பாராட்டலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு ?

“மை நாதுராம் கோட்சே போல்தா” (நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்) என்ற நாடகம் மூலம் காந்தி கொலையை, கோட்சே பார்வையிலிருந்து சங்பரிவார் கும்பல் நியாயப்படுத்தியது. அந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நாம் கோரவில்லை. மாறாக, அதை வாய்ப்பாகக் கொண்டு மக்கள் மன்றத்தில் சங்பரிவார் கும்பலின் கோரமுகத்தை அம்பலப்படுத்தி னோம். இன்று, அந்த நாடகத்தை நினைக்கக் கூட ஆளில்லை. இந்த அணுகுமுறைக்கு மாறாக, கருத்தை கருத்தால் எதிர்க்கத் துணிவற்ற கருத்துக்கோழைகள், உயிரைப்பறிக்க ஓலமிடுவது நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய கேவலம்.


முகம்மது நபியைப் பற்றி ஒரு கதை உண்டு. நபி தினமும் ஒரு குறிப்பிட்ட தெரு வழியாகச் செல்வாரம். நபியின் போதனைகளின் மேல் வெறுப்புற்ற யூதப் பெண்மணி ஒருவர், நபி வரும் நேரம் பார்த்து அவர்மேல் குப்பையை வீசுவாராம். இது நீண்ட நாட்கள் நடைபெற்றதாம். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த யூதப்பெண்மணி, நபியின் மேல் குப்பைகளைக் கொட்டவில்லையாம். உடனே நபி அக்கம் பக்கத்தில் அந்த பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரித்தாராம். அப்பெண் உடல் நலன் குன்றி இருக்கிறார் என்று அறிந்து வீட்டிற்கே சென்று உடல் நலன் குறித்து அப்பெண்ணிடம் கேட்டறிந்தாராம். எதிர்கருத்து உள்ளவர்களைக் கூட தமது அணுகுமுறையால் நாணப்பட வைக்க முடியும் என்று நிரூபித்தவர்தான் முகம்மது நபி. ஆனால், நபியின் கூற்றை உள்ளது உள்ளபடி அப்படியே பின்பற்றுகிறோம் (எவ்வித மாற்றமும் இன்றி) என்று மார்தட்டுகிறவர்கள், நபியின் செயலை மட்டும் பின்பற்ற மறுத்து, சமூகத்தின் சமநிலையைக் குலைப்பது கண்டிப்பாகஅறிவுநாணயமற்ற செயல் தான்.

கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்க முஸ்லிம் மதவெறியர்கள் ஆர்வம் காட்டுவதால், சங்பரிவார் கூட்டம் இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தாங்கள் ஏதோ கருத்துரிமையைப் பாதுகாக்கவே பிறந்தவர்கள் போல் வேடமணியத் துடிக்கிறார்கள்.

2000 -பேருக்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை மிக நேர்த்தியாக திட்டமிட்டுக் கொன்ற “மரண வியாபாரி” (நன்றி - சோனியா காந்தி) குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, “கருத்துரிமையைக் காக்க (!?) தஸ்லிமாவுக்கு குஜராத்தில் அடைக்கலம் தரத் தயார்” என்கிறார். வி.எச்.பி. அசோக் சிங்கல், ஆர்.எஸ்.எஸ். சுதர்சனம் போன்ற கழிசடைகளெல்லாம் கருத்துரிமையைப் பற்றி போதிக்கின்றன.

புகழ்பெற்ற ஓவியர் எப்.எம். உசைன் வரைந்த படங்களை, பரோடா ஓவியக் கல்லூரிக்குள் அத்துமீறி புகுந்து உடைத்தது -

“வாட்டர்” திரைப்படத்தை (பார்ப்பனக் கைம்பெண்களின் அவலத்தை விளக்குவது) தீபா மேத்தா எடுக்க முனைந்த போது படப்பிடிப்புத் தளத்திற்கே சென்று மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியது -

அமிர்கானின் “ஃபன்னா” திரைப்படத்தை திரையிட விடாமல் திரையரங்கை அடித்து நொறுக்கியது - என பல மைல் தூரம் நீளும் சங்பரிவார் கூட்டத்தின் கருத்துரிமைக்கு எதிரான வன்முறைப் பட்டியலை அனைவரும் அறிவோம்.
கருத்துரிமை என்ற பெயரால் தஸ்லிமாவுக்கு அடைக்கலம் கொடுக்க சங்பரிவார் ஆர்வம் காட்டுவதற்கும், “சாத்தானின் வேதங்கள்” எழுதிய சல்மான் ருஷ்டி -க்கு இந்தியா வர சங்பரிவார் ஆட்சியில் அனுமதி கொடுத்ததற்கும் “முஸ்லிம் எதிர்ப்பு” என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்பதை கை சூப்பும் கைக் குழந்தையும் நன்கு அறியும். காட்டுமிராண்டிக் கூட்டம் தங்களை சீர்திருத்தக்காரர்களைப்போல காட்ட ஒருபுறம் தீவிரமாக முயல்கிறது. மறுபுறமோ, மதச்சார்பின்மை - எங்கள் உயிர் மூச்சு என்று கூறிவந்த மார்க்சிஸ்டுகள் இப்போது அம்பலப்பட்டுப் போய் நிற்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் தங்கவைக்கப்பட்ட (வீட்டுச் சிறையில் தான்) தஸ்லிமா நஸ்ரின், ஏன் அங்கிருந்து அவசர அவசரமாக பிடுங்கி வீசப்பட்டார் என்பதற்கு கார்ல் மார்க்ஸ் -இன் வழித் தோன்றல்கள் பதிலளிக்கவேண்டிய நெருக்குதலில் இருக்கிறார்கள். இடதுசாரி சிந்தனையாளரான “சப்தர் ஹஸ்மி” மதவெறி, முதலாளித்துவதத்திற்கு எதிராக வீதி நாடகக் குழுவை மேற்கு வங்கத்தில் நடத்தி வந்தார். ஒரு புத்தாண்டு தினத்தில் மத வெறி, முதலாளித்துவ வாதிகள் சப்தர் ஹஸ்மி -அய் நடு வீதியில் வெட்டிக்கொன்றதும் மேற்கு வங்கத்தில் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

“த்விகன்திதோ” என்ற பெயரில் தஸ்லிமா தனது சுய சரிதையின் 3-ஆவது பகுதியை எழுதினார். அதை மேற்கு வங்க அரசு 2003 -இல் தடை செய்தது. அப்போதே சிவப்புச் சாயம் மெல்ல கரையத்தொடங்கியது. தடையை எதிர்த்து எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்று கூடி அறிக்கை விட்டும், போராடியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதன்பிறகு நீதிமன்றம் தான் தலையிட்டு 2005-இல் தடையை விலக்கியது.

பல பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தோனே´ய நாட்டில் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். கம்யூனிஸ்டுகளை வெட்டிச் சாய்த்த அந்த அராஜக செயலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நிதி உதவி அளித்ததுதான் இந்தோனே´ய நாட்டைச் சார்ந்த “சலீம் குழுமம்”. அந்த சலீம் குழுமம் மேற்கு வங்க நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நுழைவதற்குத் தான் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். என்னே விநோதமான வரலாறு !.

சலீம் குழுமம் நந்திகிராமில் நுழைவதை எதிர்த்து இ. காங்கிரஸ் ஆதரவு பெற்ற “அனைத்திந்திய சிறுபான்மையினர்” என்ற முஸ்லிம் அமைப்பு நவம்பர் 27, 2007 -இல் கடையடைப்பு நடத்தியது. அந்த அமைப்பு மேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா வெளியேறவேண்டும் என்றும் கோரியது.

மேற்கு வங்க மாநிலத்தில் 25 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக முஸ்லிம் வாக்குகள் உள்ளன. மேலும், நந்திகிராமில் மிகப்பெரும்பான்மையாக இருப்பதும் முஸ்லிம் மதத்தினர்தான். இந்த வாக்கு வங்கியில் மயங்கிய மார்க்சிஸ்டுகள் மதச்சார்பின்மைக்கு ஆழ குழிதோண்டிவிட்டனர். மதச்சார்பின்மையா ? வாக்கு வங்கியா ? என்ற சிக்கல் எழுந்த போது மற்ற சாதாரண அரசியல் கட்சிகளைப் போன்றுதான் மார்க்சிஸ்டுகளின் அணுகுமுறையும் இருக்கிறது. கொள்கை, கோட்பாடு என்று அவர்கள் பேசுவதில் சிறிதும் பொருளில்லை.

தேர்தலில் நிற்க கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஒரு முறை காங்கிரஸ்காரர்கள் ஓங்கிக் குரல் எழுப்பியபோது, இராஜகோபாலாச்சாரி இப்படிக் கூறினார் : “தடை செய்யும்போது தான் புரட்சிக்காரர்கள் வலுப்பெறுவார்கள் ; கம்யூனிஸ்டுகளை பாராளுமன்றத்திற்குள் விடுங்கள் தானே ஒழிந்து விடுவார்கள்” .

இராஜகோபாலாச்சாரி கூட கம்யூனிசத் தத்துவத்திற்கு (கம்யூனிச கட்சிகளுக்கு அல்ல) எதிரி, அதனால் அப்படிக் கூறியிருப்பார் என்று வாதிடலாம். ஆனால், பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன், “டெல்லிக்கு (பாராளுமன்றத்திற்கு) அனுப்பினால் போதும், எவ்வளவு பெரிய புரட்சிக்காரனும் சீரழிந்து சின்னாபின்னமாகி விடுவான்” என்றார்.

எது எப்படியாயினும், ஷேக் முஜிபுர் ராகுமான் கொல்லப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சியில் அவர் கொல்லப்பட்ட நாள் - வங்கதேசத்தின் தேசிய விடுமுறை நாளாக ஆனது ; அவரின் வீடு தேசிய அருங்காட்சியகமாக மாறியது. அதுபோல, எதிர்காலத்தில் தஸ்லிமா நஸ்ரின் படைப்புகள் அங்கிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுவரை, முற்போக்காளர்கள் அடக்குமுறைக்கு எதிராக தங்களின் குரலை இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஆக்கம் - மேட்டுர்.கி.ஜஸ்டின்ராஜ்
9994038131

www.thozharperiyar.blogspot.com